‘3 மாதங்களுக்கு மேல் இந்த ஆட்சி நீடிக்காது’ டி.டி.வி.தினகரன் பேட்டி

- in டாப் நியூஸ்
113
Comments Off on ‘3 மாதங்களுக்கு மேல் இந்த ஆட்சி நீடிக்காது’ டி.டி.வி.தினகரன் பேட்டி

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்காக நேற்று மதியம் 1.40 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் ப.தனபால் அறைக்கு வந்தார். பின்னர் சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு எம்.எல்.ஏ. அடையாள அட்டை, சட்டமன்ற விதிகள் அடங்கிய புத்தகங்களை சபாநாயகர் வழங்கினார். சபாநாயகருக்கு டி.டி.வி.தினகரன் பூங்கொத்து கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட சபாநாயகர், தினகரனுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்பட தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும், கட்சி பதவி பறிக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். சசிகலாபுஷ்பா எம்.பி.யும் டி.டி.வி.தினகரனுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தபோது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் யாரும் தலைமைச் செயலகத்தில் இல்லை.

பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஒரு சிலரின் தவறான எண்ணங்களால் அ.தி.மு.க. சோதனைகளை சந்தித்து வருகிறது. பல பேரை கட்சியில் இருந்து நீக்குகிறார்கள். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்களே மற்றவர்களை நீக்குகிறார்கள். நீக்கவேண்டும் என்றால் உங்களில் 5 அல்லது 6 பேரை தவிர கட்சியில் உள்ள 1½ கோடி தொண்டர்களையும் நீக்க வேண்டும்.

தோல்விக்கு பின்னர் ஏற்பட்ட பயம், பதற்றத்தில் என்ன செய்கிறார்கள்? என்று அவர்களுக்கு தெரியவில்லை. அந்த 5, 6 பேர் யார் என்பது அவர்களுக்கு தெரியும். கட்சியில் இருந்து நீக்குவதன் மூலம் யாரையும் பயமுறுத்த முடியாது. அவர்களே எங்களை நோக்கி புறப்பட்டுவிட்டார்கள். வழிவிட்டால் வருங்காலம் உங்களை மன்னிக்கும்.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் அவர்களுடைய வேலையை செய்வார்கள். ஜனவரி இறுதிக்குள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்ற தீர்ப்பு வரும். பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு வரும்.

2 அல்லது 3 மாதங்கள் இழுக்கலாமே தவிர அதன்பின்னர் ஆட்சியை தக்கவைக்க முடியாது. 5 அல்லது 6 பேர் வழிவிட்டால் மற்றவர்கள் எங்களோடு வருவார்கள், ஆட்சியை தக்கவைக்கலாம்.

ஜனவரி முதல் வாரத்தில் ஆர்.கே.நகரில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தப்படும். சட்டமன்றத்துக்குள் வருபவர்கள் பாதிபேர் தொப்பியை போட்டுக்கொண்டு என்னோடு வந்து ஆர்.கே.நகரில் ஓட்டு கேட்டவர்கள் தான். என்னுடைய வெற்றியால் அந்த 6 பேர் கூட மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்.

முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் மற்றும் அந்த 4 பேருக்கும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் உதவி செய்திருக்கிறார்கள் என்பது அவர்களின் மனசாட்சிக்கு தெரியும். அதை அவர்கள் திரும்பிப் பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

முன்னதாக, பதவி ஏற்கவந்த டி.டி.வி.தினகரனுக்கு அடையாறில் உள்ள அவருடைய இல்லத்தில் இருந்து வழிநெடுக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடைய ஆதரவாளர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைமைச் செயலகம் வெளியேயும் திரளான ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

சில இடங்களில் சாலையை மறித்து தினகரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதால் மெரினா கடற்கரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அவருடைய ஆதரவாளர்கள் மெரினா கடற்கரை சாலையில் வரவேற்பு பதாகைகள் வைத்துக்கொண்டிருந்தனர். அவர்களிடம் அனுமதி இல்லாமல் பதாகைகள் வைக்கக்கூடாது என்று போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்