2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்று ஆட்சியை அமைக்கும் – ராகுல் காந்தி

- in ஸ்மைல் ப்ளீஸ்
61
Comments Off on 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்று ஆட்சியை அமைக்கும் – ராகுல் காந்தி
புதுடெல்லி,
டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஜன் ஆக்ரோஷ் (மக்களின் கோபம்) என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பேரணி நடந்தது. பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியையும், பாரதீய ஜனதா அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
பிரதமர் மோடி ஆட்சியின் சீர்கேடுகளையும், சிறுபான்மையினர் தாக்கப்படுவதையும், ஊழல் அதிகரித்து இருப்பதையும் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார் ராகுல் காந்தி.
ஜனநாயக அமைப்புகளை ஆர்எஎஸ்எஸ் அமைப்பும், பாரதீய ஜனதாவும் இணைந்து சிதைத்து வருவதை நாட்டின் காவல்காரர் என்று கூறிக்கொள்ளும் மோடி மவுனமாக இருந்து வேடிக்கை பார்க்கிறார் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து பிரதமர் மோடி இதுவரை வாய்திறந்து பேசவில்லை எனவும் ராகுல் சுட்டிக்காட்டினார்.
“பிரதமர் மோடி சீனப்பயணம் மேற்கொண்ட போது டோக்லாம் விவகாரம் தொடர்பாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவர் என்ன விதமான பிரதமர்?” என கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்வியை எழுப்பினார்.
தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சனம் செய்த ராகுல் காந்தி, காங்கிரஸ் அரசையும், மத்தியில் இப்போது உள்ள பாரதீய ஜனதா அரசையும் ஒப்பிட்டு பேசினார். “காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக நடத்தப்பட்டனர். ஆனால் பாரதீய ஜனதா ஆட்சியில் தலித்களும், சிறுபான்மையினரும் நசுக்கப்படுகிறார்கள். மோடி தலைமையிலான ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது, நாங்கள் சிறப்பாக அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி வரியை ‘கப்பார் சிங் வரி’யாக மாற்றிவிட்டார்கள். பெண்களுக்கு எதிராக பாரதீய ஜனதா எம்எல்ஏக்கள் பலாத்கார நடவடிக்கையில் (உன்னோவ் பலாத்கார சம்பவம்) ஈடுபடுகிறார்கள். இதுதான் பாரதீய ஜனதா ஆட்சியா?” என கேள்வியை எழுப்பினார் ராகுல் காந்தி.
மோடியின் ஆட்சியில் விவசாய கடனை அரசு தள்ளுபடி செய்தாத காரணத்தினால் விவசாயிகள் மிகவும் அழுத்தத்தில் உள்ளார்கள். பிரதமர் மோடியோ விவசாயிகள் பிரச்சினைகள் குறித்தும் ஒருவார்த்தை பேசுவதற்கு மறுக்கிறார். விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன், ஆனால் அவர்கள் எங்களுடைய பேச்சை கேட்ககூட இல்லை. நாடு முழுவதும் விவசாயிகள் கடன் பிரச்சினையால் சிக்கித் தவிக்கிறார்கள், கடனை இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. ஆனால், மோடி அரசு  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடனை தள்ளுபடி செய்து வருகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி நிலைப்பாடு எடுக்காமல் இருந்திருந்தால், நிலம் முழுவதையும் மோடி அரசு அபகரித்து இருக்கும் என்றார் ராகுல் காந்தி.
 காங்கிரஸ் கட்சி மக்களிடத்தில் அன்பை பரப்புகிறது, ஆனால் பாரதீய ஜனதாவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெறுப்புணர்வை பரப்புகின்றன என்றும் விமர்சனம் செய்தார்.
காங்கிரஸ் கட்சி கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்காரில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களிலும், 2019 பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றிப்பெறும், பாரதீய ஜனதாவை தோற்கடிக்கும் என நம்பிக்கையை தெரிவித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்கள், இளம் தலைவர்கள் என அனைவரின் கருத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அனைவரும் கருத்து சுதந்திரத்துடன் இருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார் ராகுல் காந்தி.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.