புதுடில்லி: ரஷ்யாவில், சீனா உள்ளிட்ட பல நாடுகள் இடம் பெறும் ராணுவ கூட்டு பயிற்சியில், இந்தியாவும், பாகிஸ்தானும் பங்கேற்க உள்ளன.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செயல் திட்டப்படி கூட்டு ராணுவ பயிற்சி, ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் நடக்க உள்ளது. இந்த பயிற்சியில், இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளும் பங்கேற்க உள்ளன. அமைதி நடவடிக்கை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஒத்துழைப்பு ஆகியவற்றை முக்கிய இலக்காக வைத்து இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சியில் இந்தியா பங்கேற்பதை, சமீபத்தில் பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி செய்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இணைந்து, ஐ.நா., அமைதிப்பணியில் ஈடுபட்டிருந்தாலும், சுதந்திரத்திற்கு பின் இரு நாடுகளும் இணைந்து ராணுவ பயிற்சி ஒன்றி்ல பங்கேற்பது இதுவே முதல்முறை. இவ்வாறு அவர் கூறினார்.