சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக் கண்ணு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி டி.ராஜா விசாரித்தார். அப்போது, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் இதுவரை அனுமதி வழங்கியது இல்லை என்றும், வள்ளுவர் கோட்டம் உள்பட குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போராட்டத்துக்கு அனுமதி வழங்க முடியும் என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி டி.ராஜா, “மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அய்யாக் கண்ணுவுக்கு ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்க வேண்டும்” என்று நேற்று பிற்பகலில் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தமிழக அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, மெரினா கடற்கரையில் அய்யாக்கண்ணு உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்குமாறு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்.
அவர் வாதாடுகையில், “மெரினாவில் போராட்டம் நடத்த கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. போராட்டம் நடத்துவதற்கு நாங்கள் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. ஆனால் மெரினாவில் நடத்த வேண்டாம் என்று தான் கூறுகிறோம். எங்கள் தரப்பு வாதங்களை தனி நீதிபதி கருத்தில் கொள்ளாமல், மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கி உள்ளார். அய்யாக்கண்ணு போலவே இன்னும் 25 சங்கத்தினர் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கோரி உள்ளனர். அய்யாக்கண்ணுவை அனுமதித்தால் பின்னர் அதுவே வாடிக்கையாகி விடும்” என்று கூறினார்.
“போராட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் மட்டும்தான் பங்கேற்பார்கள் என்று அவர் கள் கூறுவதால், வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம், காயிதே மில்லத் மணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்குகிறோம். ஆனால், மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது” என்றும் அரவிந்த் பாண்டியன் வாதிட்டார்.
அய்யாக்கண்ணு சார்பில் ஆஜரான வக்கீல் அய்யாத்துரை வாதாடுகையில், “2003-ம் ஆண்டு மெரினாவில் ஜெயலலிதாவை அன்னை மேரியாக சித்தரித்து வைக்கப்பட்ட ‘கட்அவுட்’ கிழிக்கப்பட்ட பிறகுதான் அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் கூட மெரினாவில் பல போராட்டங்கள் நடந்து உள்ளன. மெரினாவில் போராட்டம் நடத்தினால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், மெரினாவில் போராட்டம் நடத்த ஒரு நாள் அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
அத்துடன், வள்ளுவர் கோட்டம் உள்பட அரசு குறிப்பிடும் 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை மனுதாரர் தேர்வு செய்து அங்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி புதிதாக மனு கொடுத்தால், அதை போலீசார் முறையாக பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.