மறைந்தாலும் மனதில் வாழும் மக்கள் திலகம்

- in டாப் நியூஸ், டோன்ட் மிஸ்
258
Comments Off on மறைந்தாலும் மனதில் வாழும் மக்கள் திலகம்
இன்று (டிசம்பர் 24) எம்.ஜி.ஆர். நினைவு தினம். எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துக்கு தனி காந்த சக்தி உண்டு. தன் அன்பாலும், மனிதாபிமானத்தாலும், வசீகர தோற்றத்தாலும் கோடிக் கணக்கான இதயங்களை கொள்ளை கொண்டவர் அவர்.

சாதாரண நிலையில் இருந்து தனது கடின உழைப்பால், செயற்கரிய செயல்களால் உயர்ந்து நாடு போற்றும் முதல்-அமைச்சராகி சகாப்தம் படைத்தவர். ‘இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப வாழ்ந்து, வரலாற்று ஏடுகளில் இடம்பிடித்தவர்.

தமிழகத்தில் சுமார் 70 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். வாழ்ந்து இருக்கிறார். அதில் 50 ஆண்டுகள் மக்களுக்காக அவர் பாடுபட்டார். இந்த 50 ஆண்டுகளில் முதல்-அமைச்சராக இருந்த 10 ஆண்டுகள் தவிர சுமார் 40 ஆண்டுகள் தமிழகத்தில் மிகச்சிறந்த, புகழ் பெற்ற ஈடு இணையற்ற நடிகராக திகழ்ந்தார்.

10 ஆண்டுகள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு, கடைசி மூச்சு காற்றிலே கலப்பது வரை முதல்-அமைச்சராக வாழ்ந்து உள்ளார். அறிஞர் அண்ணாவால் என்றும் போற்றப்பட்டவர். நடிகர், தயாரிப்பாளராக இருந்ததுடன், படத்தை இயக்கி, தானே நடித்து, தமிழகத்தில் புகழ் பெற்ற படங்களை தயாரித்த ஒரே நடிகர் என்ற பெயரை பெற்றவர்.

‘நாடோடி மன்னன்’ என்ற படத்தை முதல் முறையாக சொந்தமாக தயாரித்து, இயக்கி நடித்தார். அந்த நாடோடி மன்னன் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாட, சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் முன்பு இருந்த தென்னிந்திய தடகள சங்க மைதானத்தில், அறிஞர் அண்ணா தலைமையில் விழா நடந்தது. இந்த விழாவில் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். வேறு எந்த படத்திற்கும் இதுபோன்ற வெற்றி விழாக்கள் நடந்தது இல்லை.

தமிழகத்தில் தனிப்பெரும் அரசியல் கட்சியாக விளங்கிய தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்து, கட்சியின் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். வேறு சிலர் வீழ்ந்தார்கள். இடையில் சிலர் மாறிவிட்டனர். கடைசி வரை அரசியலில் எம்.ஜி.ஆர். இருந்தார். ஒரு நடிகர் தொடர்ந்து 3 முறை முதல்-அமைச்சரானார் என்றால், அது எம்.ஜி.ஆர். மட்டும் தான்.

1967-ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். பரங்கிமலை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக நடிகர் எம்.ஆர்.ராதா, எம்.ஜிஆரை துப்பாக்கியால் சுட்டார். இதில், கழுத்தில் குண்டு காயம் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் மாபெரும் வெற்றி வாகை சூடினார்.

பின்னர், தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வை தோற்றுவித்த அவர், 1977 மற்றும் 1980-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வென்று முதல்-அமைச்சர் இருக்கையை அலங்கரித்தார். இதற்கிடையே, 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது நடந்த தேர்தலில், இந்தியாவிலேயே யாரும் செய்ய முடியாத அளவில் அமெரிக்காவில் இருந்தபடியே மாபெரும் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆனார்.

எம்.ஜி.ஆருடன் நான் 35 ஆண்டுகள் ஒன்றாக இருந்தேன். அதனால் அவரைப்பற்றி ஒரு சிலவற்றை சொல்கிறேன். நடிகர் மட்டும் அல்லாது, பொதுமக்களுக்கு செய்த பல நல்ல செயல்களால் தி.மு.க.வுக்கு நல்ல புகழை வாங்கி தந்தார். குறிப்பாக சென்னை மாநகரில் மழை பெய்து வெள்ளம் வந்தால் குடிசையில் வாழும் மக்களுக்கு சமையல் செய்து அவர்கள் இருக்கும் பகுதிக்கே கொண்டு சென்று உணவுகளை வழங்குவார். அதேபோல் எங்காவது குடிசை தீப்பற்றி எரிந்தால் உடனடியாக வேண்டிய உதவிகளை செய்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவும் வழங்குவார்.

ரிக்‌ஷாக்காரர்களுக்கு ‘ரெயின் கோட்’ வழங்கியவர் எம்.ஜி.ஆர். தான். ஏனென்றால், ஒரு முறை வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, ரிக்‌ஷா தொழிலாளி ஒருவர் தன் வண்டியில் இருந்த பயணி மழையில் நனையாதபடி இருக்க பிளாஸ்டிக் சீட் போட்டு பத்திரமாக அழைத்து கொண்டு சென்றார். ஆனால் ரிக்‌ஷா தொழிலாளி மழையில் நனைந்தபடி சென்றார். இதனை பார்த்த எம்.ஜி.ஆர். உடனடியாக ரிக்‌ஷா தொழிலாளிகளுக்கு ‘ரெயின் கோட்’ வழங்க உத்தரவிட்டார். தற்போது வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள ஏரிக்கரை மைதானத்தில் 6 ஆயிரம் எண்ணிக்கையில் ‘ரெயின் கோட்’ தயாரித்து ரிக்‌ஷா தொழிலாளிகளுக்கு வழங்கினோம்.

இப்படி மற்றவர்களுக்கு உதவி செய்வது மட்டும் அல்ல, தன்னை எதிர்த்தவர்களுக்கும் உதவி செய்யும் குணம் படைத்தவர். எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டதால், வழக்கு விசாரணை முடிந்து சிறைக்கு சென்று எம்.ஆர்.ராதா திரும்பினார். மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க வந்த போது, எம்.ஜி.ஆர். தான் நடித்த படங்களில் எம்.ஆர்.ராதாவுக்கும் வேடங்களை அளிக்க உத்தரவிட்டார். அதேபோல் நோய் நொடியில் சிக்கியவர்கள், திருமண உதவி கேட்டு வருபவர்களுக்கும் உடனடியாக பண உதவி அளிக்க சொல்வார். நாங்கள் விரைந்து சென்று உதவிகளை செய்வோம். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்த புரட்சி நடிகர், புரட்சி தலைவர் என்றும் பொன்மனச் செம்மல் என்றும் இன்றும் உலக தமிழர்களிடம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், குடும்பத்துக்கு என்று எதையும் வைக்கவில்லை. அழியாத புகழை தான் சேர்த்து வைத்து உள்ளார். ‘மரத்தில் ஒரு கனி தொங்கி கொண்டு இருக்கிறது. அது யாருடைய மடியில் விழப்போகிறதோ? என்று எண்ணி கொண்டு இருந்த நேரத்தில், அது என்னுடைய மடியிலேயே விழுந்தது. அதனை பத்திரமாக இதயக்கனியாக வைத்து கொண்டேன். அதுதான் இதயக்கனி எம்.ஜி.ஆர்’ என்று அறிஞர் அண்ணா பெருமையாக கூறினார்.

பெரும் புகழுடன் இதயக்கனியாக உலக தமிழ் மக்களின் இதயங்களில் எம்.ஜி.ஆர். வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மறைந்தாலும் மக்கள் மனதில் மக்கள் திலகமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்