மும்பை: மஹாராஷ்டிராவில், அரசு மருத்துவமனையில், கோமா நிலையில் இருந்த இளைஞரின் கண்ணை, எலி கடித்த சம்பவம் நடந்துள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் மும்பையில், பால் தாக்கரே அரசு மருத்துவமனை உள்ளது. விபத்துகளில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு, இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இங்கு, விபத்தில் சிக்கி, தலையில் பலத்த காயமடைந்த, பர்மிந்தர் குப்தா, 27, சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, மூளையில் ரத்தம் உறைந்து விட்டதால், கோமா நிலைக்கு சென்றார். மருத்துவமனையில், முதலில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டாலும், சமீபத்தில், அவரை, பொது வார்டுக்கு மாற்றி விட்டனர்.இந்நிலையில், பர்மிந்தர் வலது கண் ஓரத்தில் எலி கடித்ததால், ரத்தம் வழிந்தது. அவரது தந்தை, அதிகாலையில் தான், மகன் கண்ணில் ரத்தம் வழிந்ததை பார்த்தார். முதல் நாள் இரவே, மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான எலிகள் சுற்றித் திரிவதை பார்த்து, ஊழியர்களிடம் புகார் தெரிவித்திருந்தார்.
பர்மிந்தரை எலி கடித்தது குறித்து, டாக்டர்களிடம் கூறியும், அவர்கள் அதை அலட்சியம் செய்ததாக, அவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, விசாரிக்கப்பட்டு வருவதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது