டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

- in சினிமா, திரைப்படங்கள்
1480
Comments Off on டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி மக்களை காப்பாற்றப் போராடும் விண்வெளி வீரர்களின் சாகசப் பயணமே ‘டிக் டிக் டிக்’. நடிகர்கள் – ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், மாஸ்டர் ஆரவ், அர்ஜூன், ஜெயபிரகாஷ், ரித்திகா ஸ்ரீனிவாஸ், விண்சென்ட் அசோகன், ஆரோன் ஆசிஸ் மற்றும் பலர். இயக்கம் – சக்தி சவுந்தர் ராஜன், தயாரிப்பு – ஹிதேஷ் ஜபக், இசை – டி.இமான், ஒளிப்பதிவு – எஸ்.வெங்கடேஷ், படத்தொகுப்பு – பிரமீதப் இ.ராகவ், கலை – எஸ்.எஸ்.மூர்த்தி கதை சுருக்கம் : படத்தின் முதல் காட்சியில் வானில் இருந்து ஒரு பெரிய விண்கல், சென்னை எண்ணுர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வந்து விழுகிறது.

14க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழக்கின்றனர். இதையடுத்து, கேரள மாநிலம் மூணாரில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மையத்தில், உயர் அதிகாரிகளின் கூட்டம் நடக்கிறது. இந்த மையத்தின் தலைவர் ஜெயப்பிரகாஷ், உயரதிகாரிகள் நிவேதா பெத்துராஜ், ரித்திகா, விண்சென்ட் அசோகன் ஆகியோர் எண்ணுர் சம்பவத்தை பற்றி விவாதிக்கிறார்கள்.

இன்னும் ஏழு நாட்களில் பூமியை நோக்கி 200 டன் எடைக்கொண்ட மற்றொரு விண்கல் வந்துக்கொண்டிருப்பதாகவும், சென்னையின் பரப்பரளவுக்கு உள்ள அந்த கல் வங்கக்கடலில் விழுந்தால், ஆயிரம் அடிக்கும் அதிகமாக சுனாமி ஏற்படும் என்ற அபாய செய்தி தெரிவிக்கப்படுகிறது. அந்த விண்கல்லை தகர்த்து அழிக்க, விண்வெளி மையத்தில் மற்றொரு நாடு பாதுகாப்பாக வைத்துள்ள 200 கிலோ எடைக்கொண்ட அணுஆயுத ஏவுகனையை திருட வேண்டும் என ராணுவக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

இதை செய்து முடிப்பதற்காக, மேஜிக் மேனாக இருந்து திருடனாக மாறிய ஜெயம் ரவியின் உதவியை நாடுகிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயம் ரவி, அவரது மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை பயன்படுத்தி, இந்த வேலையில் ஈடுபட சம்மதிக்க வைக்கிறது ராணுவ அதிகாரிகள் குழு. தனது சகாக்கள் ரமேஷ் திலக் மற்றும் அர்ஜூனுடன் இணைந்து, விண்வெளிக்கு புறப்பட தயாராகிறார் ஜெயம் ரவி. ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில், ஜெயம் ரவிக்கு மிரட்டல் ஒன்று வருகிறது. மகனை பிணையக் கைதியாக பிடித்து வைத்திருக்கும் வில்லன், அணுஆயுத ஏவுகணையை கேட்கிறது. மகனா… மக்களா… ஜெயம் ரவி என்ன முடிவெடுக்கிறார்? அந்த மர்ம வில்லன் யார்? விண்கல் தகர்க்கப்பட்டதா என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.

இந்தியாவின் முதல் விண்வெளி படம் என அறிவித்தது தவறில்லை என்றளவுக்கு, முழுநீள விண்வெளி படத்தை தந்திருக்கும் இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜனுக்கு பாராட்டுக்கள். காதல், டூயட் என சிதறாமல் நேர்கோட்டிலேயே பயணிக்கிறது கதை. பாசக்கார தந்தை, திருடன், மேஜிக் மேன், விண்வெளி வீரன் என அனைத்தையும் அற்புதமாக வெளிபடுத்தி இருக்கிறார் ஜெயம் ரவி. அதுவும் குறும்பா பாடலில், மகனுடனான அந்த அன்பு ரசிக்க வைக்கிறது. நிவேதா பெத்துராஜ்க்கு இந்த படத்தில் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஹீரோவுடன் டூயட் பாட வேண்டிய கட்டாயம் இல்லை.

சரியாக பயன்படுத்தி இருக்கிறார். ரமேஷ் திலக்கும், அர்ஜூனும் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். ஜெயபிரகாஷூக்கு வழக்கமான வேடம் தான். தன் பங்களிப்பை சரியாக தந்திருக்கிறார். விண்சென்ட் அசோகன், பாலாஜி வேணுகோபால், கே.பாலாஜி, ரித்திகா ஸ்ரீனிவாஸ் என அனைவருமே தங்கள் பாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள். ஜெயம் ரவியின் மகன் ஆரவுக்கு இது அறிமுகப்படம்.

பெரிய வேலை இல்லை என்றாலும் நன்றாகவே இருக்கிறது ஒரிஜினல் அப்பா மகன் கெமிஸ்ட்ரி. ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷூம், கலை இயக்குனர் எஸ்.எஸ்.மூர்த்தியும் நம்மை விண்வெளிக்கே அழைத்து சென்றிருக்கிறார்கள். டி.இமானுக்கு இது 100வது படம் என்பதால், அதற்கான உழைப்பை தந்திருக்கிறார். அதன் பலன் திரையில் தெரிகிறது. விண்வீரா, குறும்பா, டிக் டிக் டிக் என அனைத்து பாடல்களும் சூப்பர். பின்னணி இசை நாம் விண்வெளி மண்டலத்தில் மிதப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. எல்லாம் இருந்தாலும், படத்தின் கதை தான் நம்பகத்தன்மையை ஏற்படுத்த மறுக்கிறது.

அவ்வளவு பெரிய பேராபத்து வரும் போது, ஒரு ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் ராணுவ அதிகாரிகளே எல்லா முடிவுகளையும் எடுத்துவிடுவார்களா என்ன? மற்ற நாடுகள் மூலமாக இந்த செய்தி கசியாமலா இருக்கும்? பெரிய, பெரிய படிப்பெல்லாம் படித்த விஞ்ஞானிகள் இருக்கும் போது, ஒரு தந்திரக்கார திருடனையா ஏவுகனையை திருட அனுப்புவார்கள். அதுவும் விண்வெளிக்கு…

விண்வெளி வீரர்களுக்கே தெரியாத விஷயங்கள் எல்லாம் மேஜிக் மேன் ஜெயம் ரவிக்கு தெரிந்திருக்கிறது. அதுவும் ஐந்து நாள் வகுப்பில் கற்றுக்கொண்டது. படத்தில் லாஜிக் என்பது கொஞ்சம் கூட இல்லை. ஆனால் அதெல்லாம் பார்க்காமல் தியேட்டருக்கு செல்பவர்களுக்கு, விண்வெளிக்கு சென்று வந்த அனுபவம் நிச்சயம் உண்டு.

Facebook Comments

You may also like

நான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்

நடிகர் தனுஷ் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் காயம் அடைந்து