திருவாரூர் : கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கதிராமங்கலம் கிராமத்தை விட்டு ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனம் உடனே வெளியேற வேண்டும், காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆண்டு மே 19ம் தேதியில் இருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூன் 30ம் தேதி வனதுர்கை அம்மன் கோயில் அருகே உள்ள எண்ணெய் கிணற்றில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் போராட்டம் தீவிரமடைந்தது. தீடீரென அங்கு கலவரம் பூண்டு தடியடியும் நடத்தப்பட்டது. பிறகு காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து அய்யனார் கோயில் தெருவில் நடைபெற்று வந்தது. நேற்று 334வது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில், மீண்டும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
கதிராமங்கலம் வெல்லாந் தெருவை அடுத்துள்ள மதகடி பகுதியில் ஆற்றங்கரையோரம் உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் வயலில் பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால் 1 மாத பயிர் முழுமையாக எண்ணெயில் மூழ்கி பாழானது.
மேலும் அருகே உள்ள அவரது 4 ஏக்கர் அளவிலான வாழை தோட்டத்திலும் எண்ணெய் பரவியது. எண்ணெய் உடைப்பு குறித்து தகவல் அறிந்த நடராஜனின் வயலுக்கு போராட்டக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து ஓஎன்ஜிசிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். வயலில் நீருடன் கலந்த எண்ணெய் படலத்தை தீவைத்தும் எரித்தனர். தற்காலிகமாக எண்ணெய் உடைப்பை அதிகாரிகள் சரி செய்துள்ளனர். ஆனாலும் எந்த நேரத்திலும் குழாயில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.